மோடியின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் தவிப்பது வருத்தமளிக்கிறது


பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
Ilayathalapathy-Vijay-press-meet-regarding-currency-issue-tamilgossip.in

பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பு கண்டிப்பாக வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்தான். நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தை இந்த அறிவிப்பு வளர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும் போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த பாதிப்பு நோக்கத்தைவிட அதிகமாகவிடக்கூடாது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இந்த அறிவிப்பால் சாதாரண பொதுமக்கள் பசிக்கு சாப்பிட முடியாமல், மருத்து மாத்திரைகள் வாங்க முடியாமல், வெளியூர் போய்விட்டு கையில் பணம் இல்லாததால் திரும்ப வீடு சேரமுடியாமல் தவிக்கிறார்கள். தினமும் கிடைக்கிற ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்து சின்ன சின்ன தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் முதற்கொண்டு, தியேட்டர்கள், மால்கள், மார்க்கெட் இவர்களெல்லாம் தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறார்களோ என்ற வருத்தம்தான் இருக்கிறது. 

அதுமட்டுமில்லாமல், பேத்தியோட திருமணத்திற்காக நிலத்தை விற்று பணத்தை கொண்டு வரும் பாட்டியிடம், அந்த பணம் செல்லாது என்று சொன்னவுடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போயிருக்காங்க. ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்வதற்காக பணம் இல்லாமல் அந்த குழந்தை இறந்துபோனது இந்த மாதிரி செய்திகளையும் நான் பார்க்கிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. 

இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. நாட்டில் 20 சதவீதம் பணக்காரர்கள் இருக்கிறார்களென்றால், அதில் சில சதவீதம் பேர் செய்கிற தவறுகளால் மீதி இருக்கிற 80 சதவீதம் மக்கள் என்ன பண்ணிணார்கள். இந்த அறிவிப்பு இதுவரை யாரும் பண்ணாத, யாரும் யோசிக்காத ஒரு சிறப்பான பெரிய முயற்சிதான் இது. அதில் எந்த மாற்றமும் இல்லை, எந்த தவறும் இல்லை. 

ஒரு சட்டத்தை அமல்படுத்தும்போது முன்கூட்டியே அதனால் என்ன பிரச்சினை வரும் என்பதை யோசித்து அதற்கான வழிமுறைகளை முன்னேற்பாடாக செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. இன்றைக்கு பணப்பட்டுவாடா கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்துள்ளதாக சொல்கிறார்கள். எனினும், பணம் எடுக்க முடியாமல் தவிப்பவர்கள் பிரச்சினையை மத்திய அரசு விரைவில் தீர்க்க வேண்டும்.

No comments