ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை உலகமெங்கும் 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிவா வெளியிடுகிறார்.
இந்நிலையில், ‘லிங்கா’ படத்தை வெளியிட்டதில் தனக்கு கொடுக்கவேண்டிய பாக்கி தொகையை சிவா திருப்ப செலுத்தாததால் அவர் வெளியிடும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை திரையிட இடைக்கால தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில் ரூ.35 லட்சத்தை வைப்பு நிதியாக நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தரப்பு செலுத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடுமாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வாங்கி வெளியிடும் சிவா, நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய தொகை செலுத்த ஒப்புதல் கொடுத்ததையடுத்து, ‘கடவுள் இருக்கான்’ குமாரு படத்திற்கான இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை 4 வாரத்துக்குள் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, திட்டமிட்டப்படி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.ராஜேஷ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments