ரூபாய் நோட்டு எதிர்ப்பை சமாளிக்க ரஜினி, அமிதாப் மூலம் பா.ஜ.க. அதிரடி பிரசாரம்


பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு வெளியிட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் கடுமையான பண தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளது.
rajini-rupess-problem-news-tamilgossip.in

முதலில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வந்தனர். படிப்படியாக அது குறைக்கப்பட்டு தற்போது முற்றிலும் பணமாற்றம் நிறுத்தப்பட்டு விட்டது. இனி தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

அதே சமயம் பணத்தை எடுக்கவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. காசோலை மூலமாக வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் இதுவரை ரூ.2000 நோட்டுகள் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வந்தன.

இதனால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு அதை மாற்ற முடியாமல் தவித்தனர். வங்கிகளிலும் பணத் தட்டுப்பாடு நிலவுகிறது. போதுமான பணம் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் நேற்று முதல் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவும் போதுமான அளவு கிடைப்பதில்லை.

பணப்பிரச்சினையால் பொதுமக்கள் சிரமப்படுவதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பியதால் அமளி ஏற்பட்டு கடந்த 7 நாட்களாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

பிரதமர் மோடி நேற்று தான் முதல்முறையாக டெல்லி மேல்-சபை வந்து எதிர்க்கட்சிகளின் விவாதத்தை கவனித்தார். ஆனால் பிற்பகலில் சபைக்கு வராததால் எதிர்க்கட்சிகள் சபையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டு முடக்கி விட்டனர்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டுக்கு பயனுள்ளது என்றாலும் அதனால் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்கள் பாதிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதனால் பா.ஜனதாவுக்கு நெருக்கடியான நிலை உருவாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா உள்பட 5 மாநில தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா கருதுகிறது.


எனவே எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக நடிகர்களை களத்தில் இறக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

அந்தந்த மாநிலங்களில் பிரபலமான நடிகர்களை வைத்து ஆதரவு பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ்பாபு, நாகார்ஜூனா ஆகியோர் மூலமும், வட இந்தியாவில் நடிகர் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோர் மூலம் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளார். செல்லாத நோட்டு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட அன்றே அதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

நடிகர்கள் மோகன்லால், மகேஷ்பாபு, நாகார்ஜூனா, அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோரும் இது நல்ல திட்டம் என்று வரவேற்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இவர்களின் ஆதரவு கருத்தை ஆடியோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து திரையரங்குகளில் காட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான குரல் பதிவு வீடியோ பதிவுக்காக நடிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நடிகர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நன்கு எடுபடும் என்பதால் விரைவில் நடிகர்களின் ஆதரவு பிரசாரம் திரையங்குகளில் ஒளிபரப்பாக உள்ளது. அவர்கள் எப்படி பேச வேண்டும் என்பது தொடர்பான ‘ஸ்கிரிப்ட்’களும் (கருத்துக்கள்) தயாராகி வருகிறது.

திரையரங்குகள் தவிர வாட்ஸ்-அப் போன்ற சமூக வளைதளங்களிலும் நடிகர்களின் பிரசாரத்தை ஒளிபரப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

இதே போல் கறுப்பு பணம் ஒழிப்பு தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சுக்களை ஆடியோ மற்றும் வீடியோக்களாக தயாரித்து திரையரங்குகளில் செய்திப்படமாக (நியூஸ் ரீல்) ஒளிபரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி வெங்கையா நாயுடு தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் நாடு முழுவதும் திரையரங்குகளில் நடிகர்களின் பிரசாரமும், மோடியின் பேச்சும் ஒளிபரப்பாக உள்ளது.

No comments