தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் நலமுடன் இருப்பதாக அவ்வப்போது, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது. அவருக்கு சுவாச பிரச்சனை இருப்பதாகவும், இதனால் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தற்போது மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஒருபக்கம், முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிமுகவினர் மறுத்தாலும், முதல்வரின் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புகைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை.
இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பதட்டமான, பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் தமிழக அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி சென்னை சைதாப்பேட்டை பிடாரி இளங்காளியம்மன் கோயிலில் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அதிமுக மகளிர் அணியினர் சார்பில் மண் சோறு உண்டு சிறப்பு பிரார்தனை செய்தனர்
No comments